மின்னணு முறையில் சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிர குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை நியமிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னையில் உள்ள 12 காவல் நிலையங்களில் சிறப்பு புலன் விசாரணை பிரிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக செப்டம்பர் 22ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.







