பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல…

பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 2011ம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை
மறுக்கப்படுவதாகவும், தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான கழிப்பிட வசதிகளை
தேர்வு செய்து செல்லும் போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக மனுவில்
தெரிவித்துள்ளார்.

தனி கழிப்பிட வசதிகள் வழங்குவதன் மூலம் சமூகத்திலிருந்து அவர்கள் விலக்கி
வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மனுதாரர், ஆண், பெண் கழிப்பிடங்கள்
தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற (gender neutral) கழிப்பிடங்களை அமைப்பதன்
மூலம் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,
விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின
சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத
சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே ஆண் – பெண் கழிப்பறைகள் தவிர்த்து, மாற்றுத்
திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டி, அவற்றைப் பாலின
சார்பற்ற கழிப்பறைகளாகவும் அறிவிப்பது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக
அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.