ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து இருப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இரு அணிகளும் பாஜக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். பாஜகவும் தனது ஆதரவை இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று பாஜக ஆலோசனை கூட்டம் முடிந்தும் ஈரோடு இடைத்தேர்தல் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அதிமுகவில் இபிஎஸ் அணி தனது தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை அறிவித்தனர்.
இந்நிலையில்தான் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் வைத்திருந்த பேனர்தான் தற்போது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேனரில் ’அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ‘ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த பேனரில், பாஜக கட்சியை சார்ந்த தலைவர்களின் படங்களும் இடம்பெறவில்லை. மாறாக ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் படங்கள் இடம்பெற்றிருந்தன. பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரிப்போம் என்று கூறிய ஜான் பாண்டியன் மற்றும் ஏசி சண்முகம் படங்களும் இடம்பெறாமல் இருந்தது. இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை இபிஎஸ் அணி உருவாக்குகிறதா? என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது.
ஆனால், இன்று மாலையிலேயே வைத்திருந்த பேனரில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த பேனரில், தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றப்பட்டிருந்தது. காலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று இருந்ததை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றியுள்ளனர். ஆனாலும் பாஜக தலைவர்களின் படங்கள் இந்த பேனரிலும் இடம்பெறாதது மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது.
பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத சூழல் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இபிஎஸ் தரப்பு நீடிக்க விருப்பமில்லை என்பதை இந்த பேனர் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறதா? என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது ஓபிஎஸ் தரப்பில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.







