இலங்கைக்கு கடந்த முயன்ற ரூ.1200 கோடி மதிப்பிலான 200 கிலோ ஹெராயினை கொச்சியில் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்படையினர் மற்றும் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ஈரானிய மீன்பிடி கப்பலை மறித்து சோதனை செய்தனர்.
அதில், சர்வதேச சந்தையில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ ஆப்கானிஸ்தான் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேரையும் கைது செய்த கடற்படை அதிகாரிகள் அவர்களை காவலில் வைத்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய போதைபொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங், கடத்தல் காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின்களில், 200 பாக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் விற்பனைக்கு தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பேக்கேஜிங் சிறப்பு அடையாளங்கள் இருந்தன. போதைப்பொருள் கடத்தலில் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் மன்னன் ஹாஜி சலீமின் நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சரக்கு இலங்கைக் கப்பலுக்கு மேலும் வழங்கப்பட இருந்தது. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த போதைப்பொருள் இலங்கைக்கானது என்றாலும், அதன் ஒரு பகுதி இந்தியக் கரையை அடைந்திருக்கும். அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் ஹெராயின் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.







