‘லியோ’ படத்தின் வசனகர்த்தாவும், பிரபல இயக்குநருமான ரத்னகுமாரின் X தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலைக் குவித்தது. நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற சாதனையையும் ‘லியோ’ படைத்துள்ளது.
திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் போது, அந்த படக்குழுவினருக்கு பரிசுத்தொகை அல்லது கார், வாட்ச் போன்ற விலையுயர்ந்த பொருட்களை தயாரிப்பாளர்கள் வழங்கும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுத்தொகை மற்றும் கார் வழங்கியது பேசுபொருளானது.
https://twitter.com/MrRathna/status/1715352842851278971
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு படத்தில் வசூல் பற்றி பிரச்னை இல்லை. நஷ்டம் வராமல் இருந்தால் போதும். படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளர் கேட்டால், நான் படத்தின் வெற்றிக்காக ஹெலிகாப்டர் ஒன்றை கேட்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்
இந்நிலையில், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.148.5 கோடி வசூலை ‘லியோ’ குவித்துள்ளதால், படத்தின் வசனகர்த்தாவான இயக்குநர் ரத்னகுமார், “ஹெலிகாப்டர் உறுதி” என தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







