ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன.
மேலும் கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் முகமது அகிப் (14), முகமது சாகிப் (9) மற்றும் மோகன் சிங் (75) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கனமழை, வெள்ளத்தால் ரைசி மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








