கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் கேரள, கர்நாடக, லட்ச தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு, கண்ணூர், திருச்சூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.







