தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், கோடை வெப்பத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அணைகள் வறண்ட நிலையில் காணப்பட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருவதால் மக்கள் தாங்க முடியாமல் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.
இந்தநிலையில் இன்று காலை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த சூழலில், மாலை நேரத்தில் கருமேகங்கள் இதமான காற்றுடன் சூழ்ந்தது. கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வசை, பண்பொழி, செங்கோட்டை, வடகரை, அச்சன்புதுார், மேக்கரை போன்ற பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







