2-வது நாளாக மதுரை மாநகரில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில்
பரவலாக பெய்த மழையில் குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 07.08.2023 முதல் 09.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
மதுரை கோரிப்பாளையம், அவுட்போஸ்ட், மாட்டுத்தாவணி அண்ணாநகர், தல்லாகுளம், கலை நகர், வளர் நகர், கே.கே நகர், வண்டியூர், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல்,
பொன்மேனி, பழங்காநத்தம், பாண்டிக்கோயில், காமராஜர் சாலை, சர்வேயர் காலனி,
புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்தது. இதனால்
சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த இரு நாட்களாக மாலை நேரத்தில் பரவலான மழை பெய்து வருவது குளிர்ந்த காலநிலையை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ம. ஸ்ரீ மரகதம்




