திருப்பதி கோயிலில் பெய்த கனமழை காரணமாக, தரிசனத்திற்கு வர முடியாமல் போனவர்கள் அடுத்த மாதத்திற்கு தேதியை மாற்றிக்கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 18-ஆம் தேதி முதல் வரும் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்கள் அந்த டிக்கெட்டை அடுத்த மாதத்திற்கு மாற்றிக்கொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதி மலைப்பாதையில் 13 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, இதனால் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி வரலாம் எனவும் தெரிவித்தார். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மழை நீரால் சேதமடைந்துள்ளதாகவும், அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வரலாம் எனவும் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.







