தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மதுபான கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசு மதுபான கடைகளில் ஏராளமான மது அருந்துபவர்கள் குவிந்தனர். கும்பகோணம், திருவாரூர், தாராசுரம், சுவாமிமலை, நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர், நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் கடை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து மதுபான கடைகளையும் வரும் 7-ம் தேதி காலை வரை மூடவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மது அருந்துபவர்கள் கூட்டம் அலைமோதியது.







