தமிழ்த் திரைப்பட பாடல்களில் நிலவை பற்றி பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம். கதாநாயகியை வர்ணிக்க, காதலிக்கு தூது சொல்ல நிலவை துணைக்கு அழைப்பதும் வாடிக்கை. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என பாடல் எழுதி வியக்க வைக்கிறார் ஆத்மநாதன் என்ற கவிஞர். ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிறார் தஞ்சை ராமையா தாஸ் என்ற கவிஞர். ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்றும் ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே’என்றும் கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை’ என தன் பங்குக்கு பாடுகிறார் கவிஞர் வாலி.
தேன் நிலா, பால் நிலா, வான் நிலா, வண்ண நிலா, வெண்ணிலா என பல்வேறு விதமாக கவிஞர்கள் நிலவை வர்ணித்திருந்தாலும் ‘தண்ணிலவு’ என நிலவை வர்ணித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் கவிஞர் மாயவநாதன். தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தை சேர்ந்த கவிஞர் மாயவநாதன் அதிகம் படித்திராதவர் என்றாலும் நிலவு குளிர்ச்சியானது என்பதை அறிந்திராத காலத்தில், குளிர்ச்சி என பொருள்படும் ‘தண்மை’ என்னும் வார்த்தையை பாமரனுக்கும் கற்பித்தவர்.
படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் தண்ணிலவு தேனிறைக்க என்ற பாடலால் தனித்துவம் பெற்றவர் கவிஞர் மாயவநாதன். தண்ணிலவு தேனிறைக்க, தாழை மடல் நீர் தெளிக்க என எளிமையுடன் எழுதிய பாடலில், விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க, பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள் என்ற அற்புத வரிகளை கையாண்டிருப்பார்..…
ஊர் உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவைப்போல் வாழ்க்கை நிலையானதல்ல என்பதை குறிப்பிடும் வகையில் மற்றொரு பாடலை எழுதியுள்ளார் மாயவநாதன். சிவாஜி நடித்த பந்த பாசம் என்ற திரைப்படத்தில் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ என்ற பாடல், மனிதன் ஒன்று எண்ண, அது மாறிப்போன நிலையை, காலத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் குறிப்பிட்டிருந்தாலும், அதே திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலில் கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு என கவலைப்படாமல் இருக்க கூறுவார்.
எம்ஜிஆர் நடித்த தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன கொடுப்பாய்’ என்ற பாடலில், கன்னமிட வந்து நின்றால் என்ற வரிகளில் கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை கையாண்டு இனிய காதல் பாடலை தந்திருப்பார் மாயவநாதன். இதயத்தில் நீ – திரைப்படத்தில், ‘சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ – இந்த கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ? – அவர் தான் என்னவரே…’என்ற பாடலில் காதலின் பெருமையை பேசியிருப்பார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போல இளம் வயதிலேயே மறைந்துபோனாலும், காலத்தால் மாயமாகாமல், தனித்து, நிலைத்து நிற்கிறார் மாயவநாதன்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்