“மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயர சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

பல வருட போராட்டத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (ஜூன்.03) பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதை நேற்று முன்தினம் இரவு முதல் அந்த அணியின் ரசிகர்கள் பட்டாசு மற்றும் மேலதாளத்துடன் கொண்டாடி வந்தனர். நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூரு அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்க நேற்று 5 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பேரணியின்போது ஏராளமான பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து,  கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கவும் பெங்களூரு அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர், கூட்டம் கலைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், பெங்களூரு அணி தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“பெங்களூரில் நடந்த சம்பவத்தை கேட்டு மனம் உடைந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன். இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”

இவ்வாறு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.