காவல்துறையில் பணியாற்றிக்கொண்டே பாடி பில்டிங்கில் பல்வேறு பதக்கங்களை பெற்று வருகிறார் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர். சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்ற 54 வது மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார் அந்த தலைமை காவலர். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சென்னையில் பணிபுரியும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும்
புருசோத்தமன் பெயரை சொன்னாலே பாடிபில்டர் என்று நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு பாடிபில்டிங்கில் சாதித்து வருபவர் புருசோத்தமன். 2002 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த புருசோத்தமன் சென்னை அடையாறு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். காவலராக பணிபுரிவதற்கு முன்னரே 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர் புருசோத்தமன்.
காவலர் பணிக்கு சேர்ந்த பின் 2004 முதல் 2008 வரை மிஸ்டர் தமிழ்நாடு
போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக
2008ம் ஆண்டு பாடி பில்டிங்கை கைவிட்ட புருசோத்தமன், 2018 ஆம் ஆண்டு தேசிய அளவில் காவல்துறைக்கான பாடிபில்டிங் பிரிவில் தமிழகத்தில் இருந்து யாரும் கலந்து
கொள்ளாததால் மீண்டும் பாடிபில்டிங்கில் களம் இறங்கினார். அதன் பலனாக அந்த போட்டியில் அவருக்கு பதக்கம் கிடைத்து.
2018 ஆம் ஆண்டில் மிஸ்டர் தமிழ்நாடு போட்டியிலும் பதக்கம் வென்று சாதித்தார் புருசோத்தமன். 10 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும், தேசிய அளவிலான காவல் பணி திறனாய்வு ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்று பாடிபில்டிங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார் புருசோத்தமன். கடந்த 2021 ஆம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போடியில் 6ம் இடத்தை பிடித்து பாடிபில்டிங்கில் சர்வதேச அளவில் அறியப்பட்டார். இதன் மூலம் உலக ஆணழகன் போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்ற முதல் காவலர் என்ற பெருமையையும் புருசோத்தமன் பெற்றுள்ளார்.
54-வது ஆசிய ஆணழகன் போட்டிக்கான தகுதி தேர்வானது ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த மே மாதம் நடைபெற்றது. அதில் தேர்வாகி மாலத்தீவில் கடந்த 17ஆம் தேதி முதல் 20
ஆம் தேதி வரை நடைபெற்ற 80 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில் கலந்து கொண்டார் புருசோத்தமன். ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இந்த ஆசிய போட்டியில் 21
நாடுகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது..
தனக்கு இந்த அளவுக்கு உத்வேகத்தை அளித்து பொருளாதார ரீதியாகவும் உதவி செய்த
பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் லோகநாதன், மற்றும் தனது சக காவல்துறை நண்பர்களுக்கு நன்றி
தெரிவிப்பதாக புருசோத்தமன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெறும் உலக அளவிலான ஆணழகன் போட்டிக்கு தற்போதே தயாரகி வருவதாகவும் புருசோத்தமன் தெரிவித்தார். இந்த போட்டிக்காக தம்மை தயார்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்திற்கும், தாய்லாந்து போய்வருவதற்கான விமான கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கும், பெரும் தொகை தேவைப்படும் எனக் கூறும் புருசோத்தமன், அதற்கான ஸ்பான்சர்சிப் கிடைத்தால் மனதளவில் உற்சாகமாக போட்டிக்கு தயாராகி சர்வதேச போட்டியில்
உறுதியாக பதக்கம் வென்று காட்டுவேன் என புருசோத்தமன் நம்பிக்கையுடன் நியூஸ்7 தமிழிடம் தெரிவித்தார்.
ஆசிய ஆணழகன் போட்டியில் பதக்கம் பெற்று தேசிய கொடியை கையில் ஏந்திய பெருமைக்குரிய தருணங்களை மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நினைவுகூர்ந்த புருசோத்தமன், தாய்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான ஆணழகன் போட்டியிலும் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பேன் என நம்பிக்கையோடு தெரிவித்தார்.
-ராகவேந்திரன்







