தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோர் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாதிமா நூரா ஆகியோர் சவூதி…

கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோர் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாதிமா நூரா ஆகியோர் சவூதி அரேபியாவில் மாணவிகளாக இருந்தபோது சந்தித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பட்டப்படிப்பு முடிந்ததும் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இந்த உறவுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, பாத்திமாவை அவரது உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு சண்டை போட்டு இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது துணைவி பாத்திமா கடத்தப்பட்டதாகவும், அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டு ஆதிலா நஸ்ரின் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும், தானும், பாத்திமாவும் அவர்களது குடும்பத்தினரால் மன மற்றும் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதைகத்தொடர்ந்து நீதிமன்றம் பாத்திமாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது. மனதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரினின் வாதங்களைக் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என தீர்ப்பு வழங்கினர்.

கேரளாவைச் சேர்ந்த இருவரும் சவுதியில் ஒன்றாக 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதன் பின் மேற்படிப்பிற்காக சொந்த ஊர் வந்துள்ளனர். பாத்திமாவை உறவினர்கள் பார்க்க அனுமதி வழங்காத நிலையில்தான் ஆதிலா நீதி மன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.