மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவை என்னென்ன திட்டங்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்..
முதலாவதாக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மரக்கன்று நடும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் வகையில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் நடப்படவுள்ளன.
2-வதாக நியாயவிலைக்கடைகள் மூலம் 13 வகையான மளிகை பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
3-வதாக கொரோனா நிவாரண தொகையின் 2-வது தவணையான ரூ. 2- ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்திலிருந்தபடியே முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
நான்காவதாக, மாத ஊதியமின்றி பணியாற்றும் கோயில் பணியாளர்களுக்கு, ரூ. 4-ஆயிரம் நிவாரண தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்.
5-வது திட்டமாக, கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்குகிறார்.
6-வதாக, நகர பேருந்துகளில் திருநங்கையர் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கும் கோப்பில் கையெழுத்திடவுள்ளார். ஏற்கனவே, சாதாரண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் திருநங்கையருக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
7-வதாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை மூலம், பிரச்சனைகள் தீர்வு காணப்பட்ட பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.







