சென்னை வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் போலிசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராயபுரம் கல்மண்டபம் ஏ ஏ சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் படி வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணான இருவரும் தகவல் அளித்ததால் போலிசார் அவர்கள் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் இருக்கைக்கு அடியில் கட்டு கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பிடிபட்ட இருவரையும் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை சின்ன மாத்தூர் மாதவரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், மற்றும் சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மதிவேல் என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் பாரிமுனையில் செல்போன் கடை வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதுடன் அவை சட்டவிரோதமாக மறைத்துக் கொண்டு வரப்பட்ட ஹவாலா பணம் என காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட இருவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.







