கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டுள்ளதா? உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட்டதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு…

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட்டதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை விட 40 டிஎம்சி அளவிற்கு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு உள்ளது என வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கர்நாடக அரசு, போதிய மழை இல்லாத காரணத்தால் கர்நாடக மாநிலத்திற்கே தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக மழை அளவு 42% குறைந்துள்ளது. எனவே நீர் பற்றாக்குறை உள்ளது. எங்கள் தரப்பு விஷயங்களை, நாங்கள் படும் சிரமங்களை எடுத்துரைக்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் நாங்கள் முயற்சி செய்தபோது அதை கேட்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர் என கர்நாடக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், காவிரி ஆணையம் 10,000 கன அடி வீதம் நீரை திறக்க உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு செய்யவில்லை. தற்போது  தமிழகத்துக்கு தண்ணீர் இல்லாமல் உள்ளது. மிக அதிகமான அளவு நீர் பற்றாக்குறை உள்ளது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இரண்டு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே ஏன் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்லக்கூடாது என வினவினார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா தண்ணீரை திறந்த விடவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதை தவிர தங்களிடம் வேறு வழி இல்லை என வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது மீண்டும் குறிக்கிட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தான் நிபுணர்கள் இருக்கிறார்கள், நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவே எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது என்பது எங்களுக்கு சிரமம் என்று கூறினர்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறந்து விட பிறப்பித்த உத்தரவு காலாவதியானவுடன் கர்நாடகா தண்ணீரை திறந்து விடுவதை நிறுத்தி விடும். நாங்கள் விதைத்துள்ள அத்தனை பயிர்களும் இறந்து போய்விடும். இந்த விவகாரத்தில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது என்பது மிக மிக அவசியம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பித்து தற்போது என்ன சூழல் என்பதை உச்ச நீதிமன்றம் உடனடியாக கேட்டு பெற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு வரும் திங்கட்கிழமைக்குள் அதிகாரிகளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பியுங்கள் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளாவது:

காவிரி ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடக அரசு நீர் திறந்து விட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வெள்ளிக் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதோடு அடுத்த 15 நாட்களுக்கு தேவையான தண்ணீர் குறித்தும், காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தியதா என்பதை தெரிவிக்க காவிரி ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், காவிரி நீர் ஆணையம் தனது கூட்டத்தை திங்கள் கிழமைக்குள் கூட்டி இரு மாநில கோரிக்கைகளையும் பரிசீலிக்கவும் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.