ஹரியானா அரசை கண்டித்து விவசாயிகள் திடீர் போராட்டம் – ஸ்தம்பித்தது டெல்லி – சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை!

ஹரியானாவில் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மறுத்த அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லி – சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 30-ம் தேதி,…

ஹரியானாவில் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மறுத்த அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லி – சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மே 30-ம் தேதி, ஹரியானா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பவந்தர் பார்பாய் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயிர்களின் பட்டியலில் சூரியகாந்தி விதைகள் மற்றும் பஜ்ரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசு நிறுவனங்கள் இந்த பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யாது எனவும் அறிவித்தது.

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கக் கோரி ஹரியானா பகுதி விவசாயிகள், அரசிற்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து முடிவெடுக்க அரசுக்கு விவசாயிகள் கெடு விதித்திருந்தனர். இந்நிலையில் நேற்று, ஹரியானா மாநில கூட்டுறவு வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (HAFED) சூரியகாந்தி விதைகளை ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,800-க்கு மாவட்டத்தின் ஐந்து மண்டிகளில் வணிகரீதியாக கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.

இதனை கண்டித்து, இன்று காலை ஷாஹபாத் தானிய சந்தையில் விவசாயிகள், அரசு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை பலனளிக்காததால்  விவசாயிகள் நெடுஞ்சாலையை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். எனவே ஷாஹாபாத் அருகே டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலையை (தேசிய நெடுஞ்சாலை-44) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய கிசான் யூனியன் (சாருணி) தலைவர் குர்னாம் சிங் சாருணி தலைமையில், விவசாயிகள் தடுப்புகளை தாண்டி, சூரியகாந்தி விதைகள் ஏற்றப்பட்ட டிராக்டர்களை நிறுத்தி, நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிறுவனங்கள் வாங்க மறுத்ததால், விவசாயிகள் ரூ.6,400 விற்க வேண்டிய தங்கள் விளைபொருட்களை ஒரு குவிண்டால் ரூ.4,000-க்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் ஏக்கருக்கு கிட்டத்தட்ட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை இழப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.