ஹார்திக் பாண்டியா அபாரம்: இந்திய கிரிக்கெட் அணி வெற்றித் தொடக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 13 டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் வென்ற கேப்டன் என்ற…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 13 டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் வென்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித் சர்மா.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பேற்றார்.
இங்கிலாந்தின் சவுதம்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

கேப்டன் ரோஹித்-இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
ரோஹித் 24 ரன்களும், இஷான் கிஷன் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடினர். பின்னர் அவர்களும் ஆட்டமிழக்க, ஹார்திக் பாண்டியா களம் இறங்கி அரை சதம் பதிவு செய்தார்.

இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கேப்டன் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 36 ரன்களும், ஹாரி ப்ரூக் 28 ரன்களும் எடுத்தனர். பேட்டிங்கில் அரை சதம் பதிவு செய்த ஹார்திக் பாண்டியா பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இவ்வாறாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 ஆட்டம் நாளை நடைபெளவுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.