அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர 7,50,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும் அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் அக்னிவீரர்களாக சேர்வதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இளைஞர்களிடையே அக்னிபாத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 3000 பணியிடங்களில் சேர்வதற்கு 7,50,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை சுட்டிக்காட்டியுள்ளார். விரக்தியில் உள்ள இளைஞர்கள் எந்த வேலையையும் செய்யும் முடிவுக்கு வரும் அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதையே இது காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இளைஞர்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதாக கருதுவது தவறான கண்ணோட்டம் என்றும் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.