இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
ராகுலும், ஹார்திக் பாண்டியாவும் அரை சதம் பதிவு செய்தனர். பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெற்றுவரும் முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா, 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராகுல், கேப்டன் ரோஹித் ஆகியோர் தொடக்க முதலே அடித்து விளையாடினர்.
எனினும், ஹேசில்வுட் பந்துவீச்சில் ரோஹித் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த கோலி 2 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 46 ரன்களிலும், அக்சர் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 6 ரன்களும், ஹர்ஷல் படேல் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ராகுல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது இந்தியா.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.








