மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி,
முதுகலையில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த
மருந்தாளுநர் பட்டயப்படிப்பு , நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு நாளை
முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம்
மற்றும் ஹோமியோபதித் துறை மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் மலர்விழி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலர்விழி அளித்த பேட்டியில் கூறுகையில், 2022-23ம் கல்வியாண்டில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி
படிப்புகளில் நீட் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல்முறையில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், அரசு மருத்துவக் கல்லூரியில் 280
இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 1,164 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மேலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில்
மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
பட்டயப் படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்பிற்கு 12ஆம்
வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இயற்கை மருத்துவம், யோகா படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.
கரோனா தொற்றுக்குப் பின்னர் சித்த மருத்துவத்தின் மகத்துவம் அதிகரித்துள்ளது.
சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் கசாயங்கள் குறித்து மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவத்தை
படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது என தெரிவித்தார்.
-ம.பவித்ரா







