சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற
கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. கல்லூரியில் 25 ஆண்டுகளாக வேதியியல் துறை பேராசிரியையாகவும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் முதல்வராகவும் பணியாற்றி வந்த கோதை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
56 வயதாகும் கோதை, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார். கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவியரின் அன்பைப் பெற்றிருந்த முதல்வர் கோதை உயிரிழந்த சம்பவம், மாணவியரிடையேயும், சக பேராசிரியைகள், கல்லூரி
நிர்வாகத்தினரிடையேயும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் கோதை உயிரிழந்துள்ள சூழலில், கல்லூரிக்கு நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் காலமான நிலையில், துணை முதல்வரான உமாராணி கல்லூரியின் முதல்வராக பொறுப்பு வகிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-ம.பவித்ரா








