நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்
வெளியிடப்பட்டுள்ளது.
2022-2023ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மைய விவரம், தேர்வின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.
இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 01-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் neet@hta.ac.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம். மேலும், நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக இணையதள முகவரியான http://www.nta.a.inஇல் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா