சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருசக்கர வாகனத்தில் நிரப்பப்பட்டதால், வான ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மாடர்ன் ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்கில் இன்று இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டி, அந்த இருசக்கர வாகனத்தை இயக்கும் போது அது இயங்கவில்லை. நீண்ட நேரம் அவர் வண்டியை இயக்கி பார்த்து சோர்வடைந்தார்.
பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்பதால் அதிருப்தியுடன் வாகன ஓட்டி தனது இருசக்கர வாகனத்தை தள்ளி சென்று பழுது நீக்கும் கடையில் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது பெட்ரோலில் தண்ணீர் கலந்து வாகனத்தில் நிரப்பப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சென்று முறையிட்டார். இதுதொடர்பாக விளக்கமளித்த பங்க் ஊழியர்கள், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கலந்திருப்பதன் காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், பெட்ரோல் நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்து தண்ணீரை பம்ப் செட் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தனர். இந்த சம்பவத்திற்கு ஐஓசி நிறுவனம் தான் பொறுப்பாக முடியும் என தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியன் ஆயில் கம்பெனியின் சேலம் இணை மேலாளர் ஜெயகிருஷ்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, தீபாவளி நேரம் என்பதால் உரிய நடவடிக்கை உடனே எடுக்க இயலவில்லை. தீபாவளி முடிந்ததும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஐஓசி பெட்ரோல் நிலையங்களில் சோதனை செய்து இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.








