மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து வந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட
போதைப் பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து
காண்பித்ததற்காக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக சட்டமன்ற உறுப்பினர்-க்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக
சட்டமன்ற உறுப்பினர்-களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை விசாரித்த தனி நீதிபதி, ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக-வில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மேல் முறையீட்டு மனு நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி
தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல்
தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, இந்த
மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்பவில்லை என
தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து
செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







