ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஷுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர்.
இதையும் படியுங்கள் : அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நேகல் வதேரா 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.








