விண்வெளியில் இருந்து வந்த உலோக பந்து ஒன்று குஜராத்தில் விழுந்துள்ளது. இது செயற்கைக் கோளின் குப்பை என சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் விண்வெளியில் இருந்து உலோக பந்துகள் விழுந்துள்ளன. பெரும் சத்தத்துடன் விழுந்த அந்த உலோக பந்துகளை பார்த்து மக்கள் வியப்படைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து உள்ளூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விண்வெளியில் இருந்து விழுந்த அந்த பொருள் சுமார் 5 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கருப்பு உலோக பந்து ஆகும். இந்த மர்ம பொருள் விழுந்த மூன்று கிராமங்களும் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த பொருளை மீட்ட காவல்துறையினர், தடய அறிவியல் ஆய்வகத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக ஆங்கில செய்தி தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உலோகப் பந்து செயற்கைக்கோள் குப்பையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முதல் உலோக பந்து நேற்று மாலை 4.45 மணியளவில் விழுந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் மற்ற இரண்டு இடங்களிலும் இது போன்ற உலோக பந்துகள் விழுந்துள்ளன.
பலேஜ் மற்றும் ராம்புரா ஆகிய இரண்டு இடங்களில் திறந்த வெளியில் விழுந்த இந்த உலோக பந்து, காம்போலாஜில் மட்டும் ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் கூறும்போது, இது திடீரென வானத்தில் இருந்து விழுந்ததாகவும், இந்த பொருள் என்னவாக இருக்கும் என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினர். இது தொடர்பாக தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டனர்.
பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசிக்கப்படும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்