நண்பனின் மனைவியைக் கடத்திய இளைஞர்: கணவர் புகார்

நண்பனின் மனைவியை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று கடத்திச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்…

நண்பனின் மனைவியை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று கடத்திச் சென்ற
இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (30). மதுரையைச் சேர்ந்தவர் கோபிகா (24). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் செங்கப்படை கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தொழில் நிமித்தமாக மனோஜ் தனது மனைவி கோபிகாவுடன் வெளியூரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் செங்கப்படை கிராமத்துக்கு வந்து இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மனோஜ் குமாரின் நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த
சபரிநாதன் (27) என்பவர் மனோஜின் வீட்டுக்கு அடிக்கடி சென்று உதவி செய்து வந்துள்ளார்.  கோபிகாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சபரிநாதன், மனோஜ் குமார் இல்லாதபோதும் அடிக்கடி வீட்டிற்கு வந்து கோபிகாவை பார்த்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கோபிகா, சபரிநாதன் ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி கோபிகா செங்கப்படை கிராமத்தில் இருந்து மதுரைக்கு அவரது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதாக மனோஜ்குமாரிடன் கூறி சென்றார் . ஆனால், அவர் சொன்னபடி தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்லாதது குறித்து அறிந்த மனோஜ்குமார் தனது மனைவியைக் காணவில்லை என கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணையில், கோபிகா தாயாருடன் பேருந்தில் மதுரைக்குச் சென்றபோது பைக்கில் பின்தொடர்ந்த சபரிநாதன் மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் வைத்து கோபிகாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் மனோஜ்குமார் மீண்டும் புகார் அளித்த
நிலையில், ஆத்திரமடைந்த சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோஜ்குமார்
மற்றும் அவரது உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பன் என்று நம்பி வீட்டிற்குள் விட்டதற்கு தனது மனைவியையே காதலித்து கடத்திச் சென்ற சம்பவம் செங்கப்படை கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.