முகத்தில் கரி, மொட்டை: காதலனுடன் சென்ற பெண்ணுக்கு கொடூர தண்டனை, ’பஞ்சாயத்து’ கைது!

காதலுடன் சென்ற பெண்ணின் முகத்தில் கரி பூசி, தலைமுடியை மொட்டியடித்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது பதான் மாவட்டம். இங்குள்ள ஹர்ஜ் என்ற…

காதலுடன் சென்ற பெண்ணின் முகத்தில் கரி பூசி, தலைமுடியை மொட்டியடித்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது பதான் மாவட்டம். இங்குள்ள ஹர்ஜ் என்ற பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர். சில நாட்களுக்கு முன் திரும்பினர்.

வந்ததும் அந்த இளம்பெண்ணை பிடித்த அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  தங்கள் பகுதிக்கு இழுத்து சென்றனர். சமூகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினர். அவர்கள் ’சட்டத்தை’ மீறியதற்காக, சரியான தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணைப் பிடித்த அவர்கள், தண்டனை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

அந்த வீடியோவில், அந்த இளம் பெண்ணின் தலைமுடியை வெட்டி எறிகின்றனர். பிறகு முகத்தில் கரியை பூசி, தீச்சட்டி ஒன்றை தலையில் வைத்து அவரை சரமாரியாகத் திட்டு கின்றனர். அந்தப் பெண், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களில் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

போலீசாருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து அவர்கள் விரைந்து சென்று, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்துத் தலைவர் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர்.

பதான் போலீஸ் எஸ்.பி, அக்‌ஷய்ராஜ் மக்வானா கூறும்போது, ’அந்த இளம் பெண் காதலிப்பது தெரிந்ததும் அவர் குடும்பத்தினர் வேறொருவருக்கு அவரை நிச்சயம் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காதலனுடன் ஒரு மாதத்துக்கு முன் ஓடிவிட்டார். கடந்த வாரம் திரும்பியதும், அவரைப் புனிதப்படுத்த வேண்டும் என்று கூறி, இந்த செயலில் அவர் குடும்பத்தினருடன் அக்கம் பக்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களாகிவிட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.