#Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!

இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…

#Gujarat | 700 kg of methamphetamine seized in the sea area near Porbandar - 8 Iranians arrested!

இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (NCB) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குஜராத்தின் போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் கப்பல் மூலம் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாகர் மந்தான்-4 என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடற்படை, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து ஈடுபட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்யைில், ஈரான் நாட்டவர்கள் என கூறிக்கொள்ளும் 8 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.சி.பி. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த, சட்டவிரோதமான இந்த போதைப் பொருளை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடற்படை, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து கைப்பற்றி இருப்பது நமது அரசு அமைப்புகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு உள்ளதைக் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக, இன்று நமது அரசு அமைப்புகள் ஒன்றிணைந்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சதியை முறியடித்து சுமார் 700 கிலோ கடத்தல் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

என்சிபி, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை, தொலைநோக்குப் பார்வைக்கான நமது அர்ப்பணிப்புக்கும், அதை அடைவதில் நமது அமைப்புகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த முக்கிய திருப்புமுனைக்கு காரணமாக இருந்த அரசு அமைப்புகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.