பிரதமர் மோடி சமூக நீதியின் காவலர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு பல உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 மாதங்களில் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றார். சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 75 ஆண்டுகளில் நடக்காத சாதனையாக திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, பாரம்பரியம், தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சென்றதன் பெருமை பிரதமர் மோடியை சேரும். ஐநாவில் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பாரதிக்கு இருக்கை அமைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். நம்முடைய தலைவரை பெருமைப்படுத்திய தலைவர் நரேந்திர மோடி என குறிப்பிட்டார். மேலும் சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி திகழ்வதாகவும் எல்.முருகன் கூறினார்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் இந்த செஸ் விளையாட்டை நடத்த காரணம் பிரதமர் மோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான். இருவரும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இன்று சென்னையில் இவ்வளவு பெரிய விழாவை நடத்துவது பெருமிதமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அனிதா, சரத் கமல், அர்ச்சனா, மாரியப்பன், தீபிகா பல்லிக்கல் ஆகியோரை பெருமைப்பபடுத்தி பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த செஸ் போட்டி நடத்தும் தமிழ்நாடு அரசு முயற்சிக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








