தமிழகத்திற்கு ரூ.8,413 கோடி ரூபாய் ஜி.எஸ்டி வரி பங்கீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வசூல் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிதி பங்கீடும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,42,702 கோடி ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகமாகும். திருப்பி அளிக்கப்பட்ட தொகைகள் போக, நிகர ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,10,909 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை விட 7.3 சதவீதம் அதிகம்.
உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அதிகரித்ததும், வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டதும் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இந்த முறை மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வரிகளில் இருந்து தமிழகத்தின் பங்காக 8,413 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை விட 46 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் வரி வருவாய் மற்றும் பொருளாதாரச் செயல்பாடு சீராக இருப்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
வரிப் பகிர்வு அதிகரித்துள்ளதால், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, நுகர்வு அதிகரித்துள்ளதும் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்பட்டதும் இந்தத் தொடர் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. குறிப்பாக ஏப்ரல் மாத வசூல் எப்போதும் அதிகமாக இருக்கும் என்றாலும், இந்த ஆண்டு அது புதிய சாதனை அளவை எட்டியுள்ளது.




