தமிழ்நாட்டில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. சென்னையில் 4 மையங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 47 மையங்களில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 600 பேர் தேர்வெழுத வந்த நிலையில் 200 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு நுழைவுச்சீட்டில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
மேலும், அரும்பாக்கம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வர்களின் தேர்வு எண்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு தேர்வு மையங்களிலும் இதேபோன்ற குழப்பநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வந்த TNPSC குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று பிற்பகல் நடைபெற இருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு தேதி குறித்து 15 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.







