நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கான கட்டணம்; தமிழ்நாட்டிற்கு பொருந்தாது

நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள மையம் தெரிவித்துள்ளது. ஜல்சக்தி அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர்…

நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள மையம் தெரிவித்துள்ளது.

ஜல்சக்தி அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, இண்டஸ்ட்ரியல், மொத்த தண்ணீர் சப்ளையர்கள், நகர்ப்புற பகுதிகளில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜன்சிகள், குரூப் ஹவுசிங் சொசைட்டிகள், குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாடு உள்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் மற்றும் அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்கள் கடந்த 30ம் தேதிக்குள் நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்காக விண்ணப்பத்துடன் ரூ.10,000 பதிவு கட்டணத்தை செலுத்துவதின் பேரில் கடந்த 30ம் தேதிக்குள் நிலத்தடி நீர் எடுப்பதை பதிவு செய்வதற்கு தற்போதைய பயனாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திலிருந்து என்ஓசி பெறாமல் நிலத்தடி நீரை தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்ஓசி பெறாமல் நிலத்தடி நீர் எடுத்தல் சட்டத்திற்கு புறம்பாக கருதப்படும் என  அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு குறித்த சந்தேகங்கள் எழுந்த நிலையில் அதுகுறித்த விளக்கத்தை மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.