திருமணம் செய்தால் தான் ஜாமீன் – உடனே தாலி கட்டிய இளைஞன்

புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.   புதுக்கோட்டை மாவட்டம்…

புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் வாலமங்கலத்தை அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அஜித், அவரை கர்ப்பமாக்கினார். மேலும் சத்யாவுக்கு ஆன் குழந்தை பிறந்தது. பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சத்யா, தன்னை ஏமாற்றிய காதலன் அஜித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்தும், தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தான் ஜாமீன் வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த திருமணத்தை கண்காணிப்பதற்காக நீதிபதி இரண்டு வழக்கறிஞர்களையும் நியமித்தார். இதனை அஜித் ஏற்று கொண்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து அஜித்துக்கும் – சத்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நீதிபதி அப்துல் காதர் வாழ்த்து தெரிவித்தார்.

இருவரும் திருமண கோலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட பிறகு அஜித்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கர்ப்பமாக்கி இளம் பெண்ணை ஏமாற்றியவருக்கு திருமணம் முடித்து வைத்து தீர்ப்பு வழங்கியதற்காக நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.