பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் – சௌமியா அன்புமணி கோரிக்கை!

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கால நிலை நடவடிக்கை…

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கால நிலை
நடவடிக்கை கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து காலநிலை நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் பொதுமக்களிடம் விநியோகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் உலகம்
வரலாறு காணாத அளவுக்கு வெப்பமாகி கொண்டிருப்பதாகவும் காலநிலை குறித்த
விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே இந்த கையெழுத்து இயக்கம் எனவும்
கூறினார்.

மேலும், பெட்ரோல், டீசல், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டை குறைப்பதோடு, அதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சௌமியா அன்புமணி கேட்டுக் கொண்டார். அனல்மின் நிலையத்திற்கு கூடுதல் நிலம் எடுப்பது தவறான முடிவு எனக் கூறிய அவர், அனைத்து நாடுகளும் உலக அளவில் கூடி கால நிலை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்திருப்பதாக தெரிவித்த அவர், அந்த குழுவுக்கு தேவையான ஆலோசனைகளும் பசுமை தாயகம் அமைப்பு மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். இந்தியா போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நிதியும், நீதியும் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.