மாநிலங்களவை உறுப்பினர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் கூட்டத் தொடர் முழுமைக்கும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 19 பேர் இந்த வாரம் முழுமைக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். எனினும், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமைதி காக்குமாறு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தொடர்ந்து வலியுறுத்திய போதும், அவர்கள் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே, அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர், தெலங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த 3 பேர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 19 எம்பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.