சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து விவாதித்தோம். திருவள்ளூர் மாவட்டம் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன் சைட் கிளியரன்ஸ் தொடர்பாக இன்று சந்தித்து விவாதித்து அது தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கை மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்க பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரம் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பன்னூர், பரந்தூரை விடத் தூரம் குறைவாக இருப்பதால், அங்கு 2-வது விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.








