சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும் என அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் தமிழ்நாடு சபாநயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற 82-ஆவது அகில இந்திய சபாநயகர்கள் மாநாட்டில் பேசிய அப்பாவு, இந்திய அரசியல் சாசன அட்டவணை 10-ன் படி சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது போன்றவை சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது, அது குறித்து முடிவெடுக்காமல், காலவரையறையின்றி கிடப்பில் போடுவதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.
மேலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில அரசால் அனுப்பப்படும் கோப்புகள், உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் கூட, அதை ஆளுநர்கள் கடைபிடிப்பதில்லை என கூறிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர்கள் காலவரையறையின்றி கோப்புகளின் மீது முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்கு வழிவகுப்பதாகவும் இதனால், சட்டமன்றங்களில் இருந்து அனுப்பக்கூடிய கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க, உரிய கால அளவை நிர்ணயம் செய்யவேண்டும் என அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.








