கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: சபாநாயகர் அப்பாவு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலையில், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி…

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலையில், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு அணுக்கழிவுகளைச் சேமிப்பதற்காக இப்பகுதியிலேயே அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பாலைவனம் போன்ற பகுதிகளில் தான் பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தினார். இந்த மாதிரியான மக்கள் வாழ தகுதியற்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

மக்கள் அதிகம் வாழும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால் மதுரை வரை அதன் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்ட அப்பாவு, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது. மத்திய அரசிடமும் இதனை கோரிக்கையாக வைத்துள்ளேன். கூடங்குளத்தில் அணு உலைகளை அதிகரித்தால் புற்றுநோய் பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆகவே, மத்திய அரசு இதனை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.