ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என எம்.பி தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொது மேலாளரை விசிக தலைவர், எம்.பி தொல். திருமாவளவன் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் இயங்கக்கூடிய விசிகவின் ரயில்வே தொழிலாளர் முன்னணி, அம்பேத்கர் பெயரில் இயங்குவது, விழா கொண்டாடுவது நிர்வாக அடிப்படையில் சிலர் மீது சென்னை கோட்டம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹெல்லர் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடனே சென்னைக்குப் பணி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் எனக் கூறினார். மேலும், இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்து வருகிறது. இந்திய ஒன்றிய அரசு கூடுதலாக தமிழகத்தை நோக்கி வரும் அகதிகளுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கஞ்சா போதையில் இளைஞரைக் கடத்திய இருவர் கைது’
அகதிகளுக்கு உரியப் பராமரிப்பு மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்குப் போகாமல் பல்கலைக்கழகங்களை ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது எனவும், விரைவில் குணமடைய வேண்டும் எனவும், பொது மக்களும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.








