தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை காலை 10 மணிக்கு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு.
ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வரும் கருத்துகள் அனைத்துமே தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, சனாதனம் குறித்து பேசி வருவது என அவர் எந்த விசயம் குறித்து பேசினாலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்துகிறது.
இதனை சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று கூறியது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி முடிவதற்குள், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதோடு திமுக அரசு மீது அதிமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இதன்படி ஜூன் 23 ஆம் தேதி டில்லி செல்லும் ஆளுநர் ஜூன் 27 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.







