ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அவையில் முழக்கம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர். இதே விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் காரில் சென்றபோது ஒரு சில அரசியல் சக்திகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆளுநர் பயணித்த கார் மீதும், அதிகாரியின் கார் மீதும் கற்களை, கம்புகளை வீசி தாக்கியுள்ளனர், மிகப்பெரிய பதற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. கருப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல் துறையே பாதுகாப்பு கொடுத்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.
காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது என்ற பழனிசாமி, தமிழக ஆளுநர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக முன்னதாகவே தகவல் தெரிவித்தும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி இது. திமுக ஆட்சியில் உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்று விமர்சித்தார்.
மேலும், காவல்துறையை ஆளும் திமுக பின்னின்று இயக்குகிறது. ஆளும் கட்சி மற்றவர்கள் மூலம் அவர்கள் எண்ணியதை நிறைவேற்றியுள்ளனர் என்றும், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காததால், வன்முறை சம்பவத்திற்கு ஆளும் கட்சி துணை போனதாகத்தான் மக்கள் நினைக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுவிட்டது என்றும் குற்றம்சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.







