ஆளுநர் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துகொள்ளாது: முதலமைச்சர்

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என  முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.  மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர்…

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என  முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்தார். அதில்,  ஆளுநருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி விரிவான விளக்கம் அளித்துள்ளார். ஆர்பாட்டத்தின் போது ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,  “ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கான்வாய் கடந்து சென்ற பின்பே கையில் வைத்திருந்த கருப்புக் கொடிகளை போராட்டக்காரர்கள் வீசினார்கள், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு எழுதிய கடிதத்திலும் ஆளுநர் வாகனம் மீது எவ்வித கொடிகளும் வீசப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆளுநர் கான்வாய் அந்த இடத்தை கடந்துவிட்டதாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி கூறினார்” என  தெரிவித்தார்.

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை அரசியலுக்கு பயன்படுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வழக்கமாக  ஓ.பி.எஸ், இ.பிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிடும் நிலையில் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.  ஆளுநருக்கான பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது எனவும், ஆளுநரின் பாதுகாப்பை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் நடக்காது என்றும் கூறினார்.

மேலும்,   ”1995ல் திண்டிவனம் அருகே ஆளுநர் சென்னாரெட்டி வாகனம் 10 நிமிடங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.  வாகனம் மீது கல், முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, ஆளுநர் சென்னா ரெட்டி உயிர் தப்பினார் என்பது அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களில் செய்தி வந்தது” என்று கூறிய முதலமைச்சர்,  தாக்குதல் நடத்தியதுடன் ஆளுநர் சென்னா ரெட்டியை திரும்பப் பெற வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.