அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். நான்காம் நாளாக நடைபெறும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
சில திட்டங்களில் தேக்க நிலை காணப்படுவதை அறிவீர்கள், அதனை நிவர்த்தி செய்வது உங்களின் முக்கிய கடமை. எந்த துறையின் திட்டங்களாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
திட்டங்களை சீரிய முறையில் நிறைவேற்றினால் உலக அளவில் நாம் ஒளிர முடியும். செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை துறைவாரியாக தொகுத்து ஆய்வுக்கூட்டம்
நடத்த வேண்டும். திட்டங்களைத் தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக்கூட்டங்கள்!. இந்த ஆய்வுக்கூட்டங்கள்தான் திட்டத்தின் வெற்றிக்கு அடித்தளமிடும்.
அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
– யாழன்







