கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்!

கூலி வேலை செய்யும் தாய் மற்றும் தற்காலிக டிரைவராக பணியாற்றும் தந்தையின் மகள் அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை சாக்கியம்பள்ளி கிராமத்தைச்…

கூலி வேலை செய்யும் தாய் மற்றும் தற்காலிக டிரைவராக பணியாற்றும் தந்தையின் மகள் அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறை சாக்கியம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களது மகள் கனிமொழி, கிராமத்திற்கு அருகில் உள்ள நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 545 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் இடம் பெற்ற மாணவியாக விளங்கியவர், மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் சார்பில் கட்டணமின்றி நடைபெற்ற நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்று தேர்வு எழுதினார். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 279 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவ மாணவிகளில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இவர், தனக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் தனது பள்ளி தமிழ் ஆசிரியர் மீனாட்சி என்பவர்  இருந்ததாகவும், ஒரு மொழி ஆசிரியர் என்பதையும் மீறி நீட் தேர்வில் வெற்றி பெற தனது தமிழாசிரியர், தலைமையாசிரியர் உள்ளிட்டோர் கஷ்டமான சூழ்நிலைகளும் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவித்தார். தன்னுடைய வெற்றிக்குத் தன்னுடைய தாய் மற்றும் தந்தை ஆகியோர் முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவி கனிமொழிக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.