யானை ஒன்று புலியை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காட்டுக்கே ராஜா என அழைக்கப்படும் சிங்கம் கூட யானையிடம் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. பல சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து யானையை வீழ்த்தலாம். ஆனால், அது எளிதில் சாத்தியப்படாது. ஆனால் யானைகளிடம் அடிக்கடி வம்புக்கு செல்லும் ஒரு விலங்கினமாக புலியை சொல்லலாம். பெரிய உருவம் கொண்ட யானையை சில சமயங்களில் புலிகள் பதுங்கியிருந்து வேட்டையாடி விடுகின்றன. ஆனால் இது புலிகளுக்கு அத்தனை எளிதல்ல. பெரும்பாலும் யானை – புலிகள் இடையேயான மோதலில் யானைதான் ஜெயிக்கும்.
இந்நிலையில் ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா விலங்குகள் தொடர்பான பதிவுகளை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகள் மோதுவதை காட்டும் வீடியோ முதல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது பதிவுகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
தற்போது புலியை யானை விரட்டும் வீடியோ ஒன்றை அவர் ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஒரு சிறு குட்டையில் யானை நிற்கிறது. அப்போது அந்த குட்டையில் தண்ணீர் அருந்த புலி ஒன்று மெதுவாக வருகிறது. இதனைக்கண்ட யானை, புலியை விரட்டி செல்கிறது.அந்த வீடியோவின் நடுவே செல்போன் ரிங்டோன் கேட்கிறது. இதனை சுட்டிக்காட்டியுள்ள சுசாந்தா நந்தா, வனங்களில் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.






