பூச்சி தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாம்பழ விவசாயத்தை காக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அஹமத். இவர், கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மா விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இங்கு, அல்போன்சா, பங்கனப்பள்ளி, பேனிஷா, நீலம், ஒட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை, திருச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு அதிக மழை பெய்ததாலும், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குறிப்பாக காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் மாற்றத்துடனே இருப்பதால் மாம்பழ விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பேசிய மாம்பழ விவசாயி அஹமத், தேளியா என்ற பூச்சி தாக்குதல் காரணமாக, பூ முதல் காய் வரை முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார். மேலும் தேளியா பூச்சி தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் இந்த விவசாயத்தை காக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.







